நல்வரவு

நல்வரவு :-

பகலில் மின்விளக்குகள்
ஒளிர்ந்து கொண்டிருந்தன

குளிர்பொருட்டு
உடைமாற்றி
காப்பியும் கவிதையும்
உறிஞ்சிக்கொண்டு
மழை
ரசித்துக்கொண்டிருந்தேன்

மழையில் சத்தத்தை
மிஞ்சும் வண்ணம்
அருகிலிருந்த
குடிசைப் பகுதியில்
அநேகம் பேர்
கூடி சலசலத்துக்கொண்டார்கள்

மழை தன் பொழிவைக்
குறைக்கையில்
கொஞ்சம் சன்னமாக
கடப்பாரையும்
மண்வெட்டியும்
நிலத்தோடு மோதும்
ஒலிகள் ஒலிக்கத்
தொடங்கியிருந்தன 

குடிசையின் அருகில்
நின்றிருந்த
இருசக்கர வாகனமும்
கோழிக்குஞ்சும்
மூதாட்டியும்
தொப்பலாக
நனைந்திருந்தனர்

சிறிது நேர இடைவெளியில்

நான் பெய்த மழையினை
வாழ்த்திக்கொண்டிருக்கையில்
நனைந்த பாடப்புத்தகத்தை
கையிலேந்தி
குடிசையிலிருந்து
வெளிப்பட்டாள்
மழையை பழித்தவாரே
ஒரு இளஞ்சிறுமி

மழை எல்லோருக்கும்
நல்வரவில்லை.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔