கிராமத்து வீடு

கிராமத்து வீடு :-




காரிருள் சூழ்ந்த இரவில்
கண்கள் விரிய 
ஜனனபுரி இல்லத்தில் 
ஜன்னலருகே விழித்திருக்கிறேன் 

சட்டம் தேய்ந்த 
புகைப்பட கண்ணாடியில் 
சொருகப்பட்டிருக்கும் 
அவளின் படம் 
எது எதையோ கிளருகிறது 

மல்லாந்து படுக்கையில் 
கண்முன்னிருக்கும் 
பனங்கட்டை உத்திரங்கள் 
எனது பால்ய கனவுகளைப் 
புதுப்பிக்கின்றன 

பூஜை சுவரில் 
மாட்டியிருக்கும் 
முருகன் சுவாமிக்கு 
வயது ஏறவே இல்லை 
என் போலன்றி  

சுண்ணாம்புச் சுவற்றின் 
உதிரும் காரைகளுக்கும் 
ஏறும் என் வயதிற்கும் 
ஏதோ தொடர்பிருப்பதாய் 
எண்ணுகிறேன்

நான்காம் தலைமுறை
தளத்தினை
தடவுகையில்
மூதாதையர் உடற்ரேகைகளை
முற்றிலுமாக உணரமுடிகிறது

சாம்பல் வண்ணம் பூசிய 
மரக்கதவின் சாவித்துவாரம் வழி 
நான் இங்கு கடந்து வந்த 
நாட்கள் தெரிகிறதா 
என எட்டிப் பார்க்கிறேன்

நாராங்கியையும்
மர ஏணியையும்
அதுவழி ஏறிச்சென்றால் 
விரியும் மொட்டைமாடியையும் 
தவிர்க்கப்பார்த்தால் 

நான் ஊனமாவேன்
உயிரிழந்து போனாலும் போவேன்.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔